பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி

8 ad
8 ad

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைதுசெய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுத்த ஆலோசனைக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கிஹான் பிலபிட்டிய வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சி.டி.விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய தொடர்பாக அவரது அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்காததன் மூலம் சி.டி.விக்ரமரத்ன அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தவகையில் சட்டமா அதிபர் இது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில், அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறியதன் மூலமும் அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 12 (2) பிரிவுகளை மீறியிருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

மேலும் அந்த கடிதத்தில், இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த தனது ஆலோசனையை பின்பற்றத் தவறியதற்காக விளக்கத்தை நேற்று (திங்கட்கிழமை) சமர்பிக்குமாறும் சி.டி.விக்ரமரத்னவிடம் சட்டமா அதிபர் கோரினார்.

அந்தவகையில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வெளியிட்ட பதிலில், சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை தான் நியமித்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.