ஓ .எம் .பி அலுவலகத்துக் கெதிராக ஜெனீவாவில் முறையிடுவோம் – லீலாதேவி

1 efr
1 efr

காணாமற் போனோர் தொடர்பான ஓ.எம்.பி. அலுவலகத்தினால், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாது என்பதை இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் அறிவிக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர், லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பன்னாட்டு இராஜதந்திரிகளை நாம் கொழும்பிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளோம்.

அப்போது அவர்கள் சொன்ன விடயம் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள ஓ.எம்.பி. அலுவலகத்திற்குள் சென்று பாருங்கள் என்று. அவர்கள் சொன்னதற்காக மட்டுமே நாங்கள் இந்த ஓ.எம்.பி. அலுவலகத்திற்கு சென்று சான்றுள்ள ஐந்து விடயங்களை கொடுத்தோம்.

மூன்று மாதத்திற்குள் எங்களுக்கு இதற்குரிய பதிலினை தாருங்கள். நீங்கள் இந்த ஐந்து பேரை கண்டுபிடித்து தருவீர்களாக இருந்தால் நாமே முன்வந்து முழுபதிவுகளையும் உங்களிடம் ஒப்படைத்து உங்கள் மூலமாக தேடுகின்றோம். உங்கள் மூலமாக நீதியினை பெற்றுக் கொள்ளுகின்றோம் என்று கூறியிருந்தோம்.

எனினும் இதுவரையில் அதற்கான பதிலினை ஓ.எம்.பி. அலுவலகம் எங்களுக்கு வழங்கவில்லை’ எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியிருந்தார்.