“மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்”- மஹிந்த

MR
MR

மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச சதித்திட்டங்களுக்கு மத்தியில்தான் இடம்பெற்றது.

எனினும், தேரர்களின் ஒத்துழைப்பினாலேயே, கடந்த 5 வருடங்களாக நாட்டையே அழிவுக்குட்படுத்திய அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியுமாக இருந்தது. இதன் ஊடாக நாட்டையும் பௌத்தத்தையும் நாம் பாதுகாத்துள்ளோம்.

மேலும்,மக்களும் யதார்த்தத்தையே விரும்புகிறார்கள் என்பதையும் நாம் இதன் ஊடாக தெரிந்துக்கொண்டோம். எனினும் இன்னும் சிலர் இந்த யதார்த்தத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் நாம் கூறியே ஆக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியும் பிரதமராக நானும் பதவியேற்றுக்கொண்டாலும், நாடாளுமன்றில் எமக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.

எதிர்த்தரப்பினரே நாடாளுமன்றில் பலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். 19ஆவது திருத்தச்சட்டத்தின் விளைவாகவே இது ஏற்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.

நவம்பரில் நாம் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாம் எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இன்று மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக அனைவரும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.