SLFP துணையின்றி எவராலும் ஆட்சியைக் கைப்பற்ற இயலாது- ஜனாதிபதி தெரிவிப்பு

Maithripala Sirisena
Maithripala Sirisena

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (22.09.2019) பிற்பகல் மாத்தறை
வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்றதுள்ளது.

கடந்த காலத்தைப்போன்றே இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் ஆட்சியைக் கைப்பற்ற இயலாது என்றும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடதுசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டும். திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலகக் கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது.

இன்று வலுப்பெற்று வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது. எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய அரசு நாட்டை நேசிக்கும் தேசப் பற்றுடைய அனைத்து இனப் பிரிவுகளுக்கிடையே நம்பிக்கையை உறுதி செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கின்றது. அந்நிய நாட்டு சக்திகளுக்கு அடிபணியாத அரசு ஒன்று எதிர்வரும் காலங்களில் உருவாக வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர்த்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஊழல் சக்திகளை தோல்வியடையச் செய்யும் மக்கள் நேய வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு தேவையாக இருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளம், அபிமானம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.