மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவுள்ளேன்- தெலுங்கானா பெண் ஆளுநர்

tamilisai 1
tamilisai 1

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்துள்ளமை தற்போது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

பொதுவாக மாநில ஆளுநர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. அதையும் மீறி சில ஆளுநர்கள் செயல்படுவதுண்டு. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த வி‌டயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார். அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.

அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து ஆளுநர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில் விமர்சித்துள்ளனர். அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது, இந்த வி‌ஷயத்தில் அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது. இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.

தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர் இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா? விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம். அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம் மூலமாக சொல்லவில்லை.அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.