பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளது – வரதராஜ பெருமாள்

35bcb90f abe7 4111 b6a4 8669a672d33e
35bcb90f abe7 4111 b6a4 8669a672d33e

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று மிக விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தற்போது வரை தீர்மானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு சார்பாக புதிய கூட்டணிகள் அமைக்கப்படுவதால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நாம் இணைவது சம்பந்தமாக அவர்கள் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க அனைவரும் ஒற்றுமை பட வேண்டும்.அதனை விடுத்து தேர்தல் காலங்களில் இணையும் கூடடணியாக இருக்க கூடாது.இதுவரை எனக்கு அவர்களிடம் இருந்து அழைப்பு கிடைக்கவில்லை.அழைத்தால் பேச தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையே பல விரிசல்களை ஜெனிவா ஏற்படுத்தி உள்ளது.நாம் இரண்டாம் தர பிரஜைகள் என்று என்னாது அனைவரும் சமமான பிரஜைகள் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்.சர்வதேசம் தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்படவில்லை. மாறாக அவர்கள் தங்களின் வியாபாரத்திற்காக எமது பிரச்சினைகளை கருவியாக பார்க்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஜெனிவா தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தமது இழந்த செல்வாக்கை மீள பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1  தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.எனவே அரசாங்கம் அந்த தீர்மானத்தில் இருந்து விலகுவதால் எமக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை ஆனால் இதனை அரசு விலகுகிறது ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுகிறது பூதாகரமாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றது.மக்கள் இம்முறையாவது சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.