இலங்கையின் மத சுதந்திரம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் கவலை

Ahmed Shaheed ICHRI 1
Ahmed Shaheed ICHRI 1

இலங்கையில் நிலவும் மத சுதந்திரம் – நம்பிக்கை சுதந்திரம் குறித்து கவலை தெரிவிக்கும் விதமான அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையாளர் அஹமட் ஷாகிட் இலங்கை வந்து, கடந்த 2019 ஓகஸ்ட் 15 – 26 வரை தங்கியிருந்தார். இதன்போது தான் சேகரித்த விடயங்களை அறிக்கையாக கடந்த ஜெனிவா அமர்வில் கையளித்தார்.

அந்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு முதல் – ஆட்சி மாற்றத்துடன் நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தன. எனினும் இன, மத, சமூகங்களிடையே பதற்ற நிலைமை நீடிக்கிறது. பொறுப்புக்கூறல், நீதிக்கான அணுகுமுறைகள் நிலைநிறுத்தப்படுவதுடன் மனித உரிமைகள் மீறல் மீளவும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் இடைவெளிகள் உள்ளன.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ஐ.நாவுடனான கடந்த அரசாங்கத்தின் உறுதி மொழிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்து விட்டார். இது தொடர்பில் பலரும் கவலை தெரிவித்தனர். அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்த அரசாங்கம் வழங்கிய உறுதிப்பாடுகளையும் அவர் மதிக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “தண்டனை இல்லாத கலாசார” போக்கு மீண்டும் மீண்டும் மக்கள் மீது வன்முறைகள் சுழற்சியாக இடம்பெற வாய்ப்பு வழங்கப்படும் – என்றும் அஹமட் ஷாகிட் குறிப்பிட்டுள்ளார்.