சஜித் பக்கம் தாவியோருக்கு “செக்” : நாளை கூடுகிறது ஐ.தே.கவின் செயற்குழு

1 unp
1 unp

சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின்  விசேட செயற்குழு கூட்டத்தை நாளை கூட்டுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெறுவதற்காக சஜித் பிரேமதாஸ பல முயற்சிகளை எடுத்திருந்தார். அதற்கு கட்சித் தலைவர் ரணில் அசைந்து கொடுக்காத நிலையில் தனித்துச் சென்று புதிய கூட்டணியை உருவாக்கினார்.

புதிய கூட்டணியின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியினரில் கணிசமானோர் பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த விசேட செயற்குழுவை கட்சித் தலைவர் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.

நாளை கூடும் செயற்குழு அமர்வில், சஜித் தரப்பினர் முக்கிய பதவிகளில் இருந்து அகற்றப்பட்டு, ரணில் சார்பானோருக்கு – சஜித்தின் கட்சி நிகழ்வில் கலந்து கொள்ளாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

இதன்படி, நவீன் திஸநாயக்கவுக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் பதவி வழங்கப்படும். மகளிர் அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார ஆகியோர் அகற்றப்பட்டு அச்சினி லொக்குபண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.