வாக்குரிமையே தமிழ் மக்களின் இறுதி ஆயுதம்!

samapanthan
samapanthan

நாடாளுமன்றத் தேர்தல்லி வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் . “வாக்குரிமையே தமிழ் மக்களிடம் இறுதியாக மிஞ்சி இருக்கின்ற ஆயுதமாகும்”. பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குரிமையை எமது மக்கள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம்.

சர்வதேசம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. உண்மை, நீதி, நியாயம் மற்றும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக நிற்கின்றது.

நாடாளுமன்றத்தில் நாம் பேரம் பேசும் சக்தியாக வந்தாலே எமது உரிமைகளையும், அரசியல் தீர்வையும் வென்றெடுக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசின் ஆதரவுடனும் வெளிச்சக்திகளின் ஆதரவுடனும் வடக்கு, கிழக்கில் இம்முறை பல கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குத் துரோகம் இழைத்தவர்களும், தமிழினப் போராட்டத்துக்குத் துரோகம் இழைத்தவர்களும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எமது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வென்றெடுக்கக்கூடியதான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்” – என்றார்.