கிழக்கின் இருப்பினைப் பாதுகாக்க தமிழர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும்- சாணக்கியன்

images 1 4
images 1 4

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினைப் பாதுகாக்கவேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டுமென இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இரா.சாணக்கியன் உரையாற்றுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இன்று தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாக நிற்கின்றது. கடந்த காலத்தில் நானும் மாற்றுக் கட்சியை ஆதரித்தவன், தெரிந்தவன் என்ற வகையில் இந்தக் கருத்தினை முன்வைக்கின்றேன்.

நாங்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பினைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் கட்சி என்பதற்கு அப்பால் அனைத்து தமிழர்களும் வாக்களிக்கவேண்டும். நாங்கள் வாக்களிக்காத காரணத்தினாலேயே தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்து வருகின்றது. என்றும் தமிழர்கள் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் எதிர்வரும் காலத்தில் நன்கு திட்டமிட்ட வகையில் செயற்படவேண்டும். எமக்கான தனித்துவம், உரிமை, அபிவிருத்தி போன்ற பல விடயங்களை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக மட்டுமே செய்துகொள்ள முடியும்.

பெரும்பான்மைக் கட்சிகள் எங்களுக்கு ஏதோ செய்வது போன்று காட்டிக்கொண்டு எமது இனத்தினை கருவறுக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கும். எனவே நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” எனத் தெரிவித்தார்.