ரவி உட்பட 10 பேருக்கு பிடியாணை – கொழும்பு பிரதான நீதிமன்றம் அதிரடி

1583338819 ravi karuna
1583338819 ravi karuna

மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான புதிய வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரைக் கைதுசெய்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  12  சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேகநபர்களாக அவர்களைப் பெயரிட்டு, பிடியாணையைப் பெற்றுக்கொண்டு கைதுசெய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதையடுத்து மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டில் பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டடிருந்தது.

இதன்போது சி.ஐ.டி.யின் கோரிக்கைக்கு அமைவாக நீதிவான் குறித்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்திருந்தார்.

இந்நிலையிலேயே இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்ற விசாரணைக்காக வந்தபோது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. அதேவேளை, 10 ஆவது சந்தேகநபரான புத்திக சரத்சந்திரவுக்கு எதிராக வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு போதிய சாட்சிகள் இன்மையால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களாக ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி அலோசியஸ், ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்சிஹேவா, சங்கரப்பிள்ளை பதுமநாபன், இந்திக சமன் குமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.