தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி

1 w
1 w

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிக்கின்றது.

இதன்காரணமாக இது குறித்து முடிவு செய்வதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்காக, வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில்தான் அறிவிக்கப்படும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் பெரும்பாலும் இறுதிசெய்யப்பட்டுவிட்டாலும், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் குழப்ப நிலை நீடித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தினமான 19 ஆம் திகதியே, வடக்குக் கிழக்கில் அந்தந்த மாவட்டங்களில் கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமையவே இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிடுவது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழரசு சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, துரைராசிங்கம், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதேபோன்று புளொட் சார்பில் பவனும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் மற்றொருவரும் பங்கேற்றிருந்தனர்.

பெரும்பாலும் வடக்கு, கிழக்கின் ஐந்து மாட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இல்லை எனக் கூறப்பட்டது.

மட்டக்களப்பில் ஏற்கனவே நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட பெண்மணி ஒருவரின் பெயர் விலக்கப்பட்டதாகவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், அங்கு போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.