தமிழர்களுக்திரான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் நிறுத்தபட வேண்டும்- வியாழேந்திரன் வலியுறுத்தல்

amal 2
amal 2

வடகிழக்கு என்பது தமிழர்கள் அதிகம் இணைந்து வாழ்கின்ற பூமி. தமிழர்கள் மத்தியில் இடம்பெறுகின்ற திட்டமிட்டு திணிக்கப்படுகின்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் நிறுத்தபட வேண்டும். செம்மலை முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் ஒரு சில தேரர்கள் அரங்கேற்றிய செயலானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையாகவும் தமிழர்களை அடக்கியாளும் செயற்பாடாகவுமே பார்க்க முடிகிறது.

மேலும் இது தொடர்பாக இன்று (24.09.2019) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது

நேற்றைய தினம் பழைய செம்மலை முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பெளத்த மதகுருவின் பூதவுடல் நீதிமன்ற உத்தரவிற்கு மீறி தகனம் செய்யப்பட்டமையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் கடந்த கால வரலாறுகளை எடுத்து கொண்டால் சட்டத்தின் அடக்குமுறையினால் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாக்க படுகின்றனர். இன்று ஆலய வளாகத்திற்குள் பெளத்த மதகுருவின் பூதவுடலினை கொண்டு சென்றமையானது இலங்கையில் வாழ்கின்ற இந்துக்களின் மத்தியில் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழர்களின் சாத்வீகமான, நீதியான, நியாயமான போராட்டங்களை எனது மாவட்டத்தில் நான் பல முறை முன்னெடுத்து சென்ற போது எனது அழைப்புக்கள் எதுவும் இல்லாமல் பல பெளத்த தேரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் எங்கள் இனம் சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்ட போது ஒரு சில அரசியல்வாதிகளுக்கு சொந்தமான போலி முகநூல்களில் நான் சிங்களத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும் சிங்களத்திற்கு சோரம் போய்விட்டதாகவும் புனை கதைகளைக் கூறி மக்கள் மத்தியில் திரிவுபடுத்தினார்கள்.

என்னை பொறுத்தவரை நான் எனது மக்கள் சார்ந்த போராட்டங்களில் எனது மக்களின் நீதி வேண்டி என்னால் அவர்கள் அழைக்கபடவில்லை என்றாலும் அவர்கள் கலந்து கொண்டால் நான் வரவேற்கத் தயார். அதே நேரம் ஏதோ ஒரு வழியில் இது போன்றவர்களின் அடக்குமுறையோ அல்லது அதிகார பிரயோகமோ இருக்குமாயின் நான் அதை பார்த்து வேடிக்கை பார்த்தவனும் அல்ல அவர்களை எதிர்ப்பதில் நான் பின்நிற்க போவதும் இல்லை என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

அத்தோடு இனியும் வேடிக்கை பார்க்கும் அரசியல் நல்லினக்கம் என்ற போர்வையில் தமிழர்களை வாழ்வியல் ரீதியாக பின்தள்ளப்படும் அரசியல் தமிழர்கள் மத்தியில் மாற்றப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்கள் தமிழர்கள் மத்தியில் இடம்பெறுகின்ற திட்டமிட்டு திணிக்கப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தபட வேண்டும் வடகிழக்கு என்பது தமிழர்கள் அதிகம் இணைந்து வாழ்கின்ற பூமி. இருந்த போதிலும் அங்கு பாதிக்கபடுவது அதிகம் தமிழர்களே வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த அரசியல் ரீதியான முன்னெடுப்பிற்கு எப்போதும் இதய சுத்தியுடன் நான் பயணிக்க என்னை தயார்படுத்தி வைத்திருப்பேன் என்பதை கூறிக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.