கொரோனா சிக்கல்கள் குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுக

9 mi
9 mi

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனோடு இணைந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அவா் இன்று கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளாா்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸை ஆபத்தான தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

தொற்று நோய் மையப்பகுதியான சீனாவில் இருந்து இந்த வைரஸ் தற்போது ஐரோப்பாவில் மிக மோசமாக தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

அமெரிக்கா தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது. பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வெளிநாட்டவா்கள் வர தடை விதித்துள்ளன.

எமது நாட்டில் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு, ஈஸ்டர், ரமழான் மற்றும் பொதுத் தேர்தல் போன்றன விரைவில் வரவுள்ள நிலையில் இங்கு கொரோனா வைரஸ் பரவுவது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சிறு வணிகர்கள், விவசாயிகள், அரசு பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்தத் திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் இதன் பின்னணியில் எழக்கூடிய சமூக பொருளாதார சிக்கல்களைத் தணிக்க ஏதுவாக ஒரு விரிவான ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை வடிவமைக்க வேண்டிய தேவை உள்ளதாக நான் நம்புகிறேன்.

இந்நிலையில் இந்த விடயங்கள் குறித்து ஒரு விரிவான மூலோபாயத்தை உருவாக்க ஏதுவாக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிற தொடர்புடைய அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கிறேன்” – என்றுள்ளது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேற்றுக் கடிதம் மூலம் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.