ஐ.தே.முன்னணி வேட்பாளர் சஜித்! நிபந்தனையுடன் ரணில் தரப்பு இணக்கம்!

ranilsajith
ranilsajith

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடித் தீர்மானித்திருக்கின்றார்கள் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவராக 2024 வரைத் தாமே நீடிப்பார் என்ற நிபந்தனையுடனேயே இந்த ஏற்பாட்டுக்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கினார் என்றும் கூறப்படுகின்றது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா, அமைச்சர் சஜித் பிரேமதாஸாவா என்ற விவகாரம் நீண்ட இழுபறியாக நீடித்த பின்னணியில் நேற்று இணக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்று அலரிமாளிகையில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகின்றது.

2018 இல் நடைபெற்ற கட்சி யின் தேசிய மாநாட்டில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான கட்சித் தலைவராக ரணில் விக்கிரம சிங்க தேர்வு செய்யப்பட்டார்.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சஜித் பிரேமதாஸா வென்று ஜனாதிபதியானாலும் 2024 வரை ரணில் விக்கிரம சிங்கவே கட்சித் தலைவராக நீடிப்பார் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வேட்பாளர்கள் நியமனத்தை சஜித்துக்கு விட்டுக்கொடுக்க ரணில் இணங்கினார் என்று கூறப்படுகின்றது.
எது, எப்படியென்றாலும் கட்சியின் செயற்குழு நாளை கூடும் போதே வேட்பாளர் யார் என்பது இறுதியாக உறுதிப்படுத்தப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.