ஐ.தே.க வேட்பாளர் சஜித்! அங்கீகரிக்கக்கூடுகிறது செயற்குழு!

UNP Sajith
UNP Sajith

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்ட யோசனையை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று பிற்பகல் 3.00 மணி அளவில் கூடவுள்ளது.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், பின்னர் குறித்த யோசனை ஐக்கிய தேசிய முன்னணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை சில நிபந்தனைகளின் கீழ் நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், தான் எவ்வித நிபந்தனைகளுக்கும் அடி பணிய ​போவதில்லை என பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

நிபந்தனைகளுடன் கூடிய அரசியல் பயணத்திற்கு ஒருபோதும் தயாராக இல்லை எனவும், யாராவது ஒருவர் தம்மை ஒரு கைப்பாவையாக எண்ணி அழைத்துச் செல்லத் தயாராக இருந்தால் அது முடியாத காரியம் எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முதன்முறையாக எந்தவொரு நிபந்தனைகளுக்கும் உட்படாமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கூடிய ஒரே வேட்பாளர் தான் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதமர் பதவி, கட்சியின் தலைமை உள்ளிட்ட கட்சியின் மற்றைய பதவிகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்ற நிபந்தனைகளின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கூடும் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றதன் பின்னர் மாலை 5 மணிக்கு ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த யோசனை தொடர்பில் அனுமதியை பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.