பருத்தித்துறையில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

t1
t1

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் பருத்தித்துறையில் அனுக்கிப்பட்டுள்ளது. பருத்தித்துறை மருதடி பகுதியில் உள்ள திலீபன் நினைவுத்தூபி அமந்துள்ள இடத்தில் இந்நினைவுதினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தியாக தீபம் திலீபன் உயிர்நீத்த 10.48 மணியளவில் ஈகைச்சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர் ஈகைச்சுடரேற்றியதைத் தொடர்ந்து மூன்று மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்த தாயாரொருவர் தியாக தீபம் திலீபன் நினைவு பொதுச்சுடரினை ஏற்றியிருந்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர் மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நினைவேந்தலில் கூடியிருந்த பொதுமக்களும் மலர்தூவி வணக்கம் செலுத்தியிருந்தனர். நினைவேந்தலில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பயந்தரு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

வடமராட்சி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்நினைவேந்தல் நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை, பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.