தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து மேலும் 527 பேர் வௌியேறினர்!

5 gf
5 gf

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட மேலும் 527 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

வவுனியா, புனானை மற்றும் கேப்பாப்பிலவு ஆகிய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வவுனியா, புனானை ஆகிய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 321 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இத்தாலி, தென்கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களாவர்.

இதேவேளை, கேப்பாப்பிலவு விமானப்படை முகாமுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்து 206 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவுக்கு யாத்திரை செய்துவிட்டு நாடு திரும்பிய தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.

வெளிநாடுகளிலிருந்து வந்த மேலும் ஆயிரத்து 960 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர் என்று இராணுவத் தளபதி மேலும் கூறினார்.