வெள்ளவத்தையில் வயோதிபத் தம்பதி கொரோனா தொற்றுடன் கண்டுபிடிப்பு

4 rf
4 rf

தலைநகர் கொழும்பில் தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வயோதிபத் தம்பதியினர் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

84 வயதுடைய குறித்த தம்பதியினர் தொற்று உறுதிப்படுத்துவதற்கு முன் கொழும்பில் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது எனக் கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்தார்.

அவர்களின் கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காணாது அந்தத் தம்பியினரின் இரு வைத்தியர்களான பேரப்பிள்ளைகளே அவர்களை வைத்தியசாலைகளில் சேர்த்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இரு வைத்தியர்களான பேரப்பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே வைத்தியர்களான பேரப்பிள்ளைகளினால் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டு குறித்த வயோதிபத் தம்பதியினர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று  கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அந்தத் தம்பதியினர் சிகிச்சை பெற்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் அவர்களைக் கவனித்த பணிக் குழுவினர்கள், வைத்தியர்கள் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த தம்பதியினர் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் 45 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தம்பதியினரின் இரு மகன்கள் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து கடந்த 14ஆம் திகதி நாடு திரும்பியுள்ளனர் என்று விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது இதுவரை உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.