மீண்டும் ஒரு போதகரால் ஹட்டனில் 800 பேர் தனிமைப்படுத்தல்!!

88 n
88 n

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை டிக்கோயா தரவளை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆரதனையில் பங்குகொண்டவர்கள் கடந்த 29ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தேவாலயத்தின் போதகர் உட்பட 09 பேர் ஏப்ரல் 02 திகதிவரை இவ்வாறு தனிமை படுத்தப்பட்டனர்.

யாழப்பாணத்தில் இடம்பெற்ற தேவாலய ஆரதனையொன்றில் போதகர் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆராதனையில் மேற்படி போதகர் உட்பட 9 பேரும் கலந்துகொண்டிருந்தமையின் பிரகாரமே தனிமைப்படுத்தப்பட்டனர்.

என்றாலும் இவர்கள் டிக்கோயாவில் நடத்தியுள்ள ஆராதனையில்;; கலந்துகொண்டுள்ள 65 குடும்பங்களைச் சேர்ந்தவர்ளும் நேற்றுமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் இருந்து வருகைதந்த 135 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 200 குடும்பங்களிலும் மொத்தமாக 800 பேர் உள்ளனர்.

இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதனால் தோட்ட நிர்வாகம் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரங்களில் கொழும்பு மற்றும் அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து வருகைதந்த சுமார் 846 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.