யாழ் நீதிமன்றில் கோத்தாபாயவிற்கு பாதுகாப்பு இல்லை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை

Supreme Court
Supreme Court

“கோத்தாபாய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் உத்தரவைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் இனி ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதியளிக்கவேண்டும். அவரது சாட்சியம் லலித், குகன் வழக்கில் முக்கியமானது”

இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

எனினும் அந்த விண்ணப்பத்தை நிராகரித்த மன்று, வழக்கின் அடுத்த சாட்சியாக டயலொக் நிறுவனத்தின் பிரதிநிதியை மன்றில் முன்னலையாகுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஒக்டோபர் 31 வரை ஒத்திவைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச, மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க ஆஜராகியிருந்தார்.

சாட்சிக்கு வழங்கப்பட்ட அழைப்புக்கட்டளைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டு அந்தக் கட்டளையின் சான்றுப்படுத்திய பிரதியை மன்றில் முன்வைத்தார்.

“லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் சாட்சியம் மிகமுக்கியமானது. எனினும் அவர் இந்த மன்றில் முன்னிலையாவார் என்று கடந்த இரண்டு தவணைகளில் அவரது சட்டத்தரணிகள் உறுதியளித்துள்ளனர்.

தற்போது அவர் இந்த மன்றில் முன்னிலையாவதற்கு பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்று கட்டளை பெற்றுள்ளார்.

அவர் ஜனாதிபதி வேட்பாளராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்தால்கூட இந்த மன்றின் கட்டளைக்கு மதிப்பளிக்கவேண்டும்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு அவருக்குப் பாதுகாப்பு இல்லாவிடின் மன்றிடம் விண்ணப்பம் செய்து மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.

இனி எந்தவொரு தேவைக்காகவும் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று மனுதாரர்களது சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய கடப்பாடு கீழ் நீதிமன்றங்களுக்கு உண்டு. அதனால் மனுதாரர்களது விண்ணப்பத்துக்கு இந்த மன்றினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால் இந்தச் சாட்சியிடம் (முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ச) சாட்சியம் பெறுவதை மேன்முறையீட்டு நீதிமன்றின் இறுதிக் கட்டளை கிடைக்கும் வரை ஒத்திவைக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளை தொடர்பில் சாட்சியின் (கோத்தாபாய ராஜபக்சவின்) சட்டத்தரணி மன்றுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அடுத்த சாட்சியை அழைக்க மன்று கட்டளையிடுகிறது. அதன்படி டயலொக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரவுகள் தொடர்பில் விளக்கமளிக்க அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணையை வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை ஒத்திவைத்து மன்று உத்தரவிட்டது.

பின்னணி

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமலாக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.