வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு!

5 wd
5 wd

உலகம் முழுவதும் கொடிய வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு 10 இலட்சத்து 15 ஆயிரத்து 850 ஆக பதிவாகியுள்ளது.

குறுகிய காலத்தில் பலமடங்காக வைரஸ் பரவல் ஏற்பட்ட நிலையில் மரணித்தோரின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தைத் தாண்டி 53 ஆயிரத்து 216 ஆக இதுவரையான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் குணமடைவோரின் வீத்ததை விட மரணமடைவோரின் வீதம் தற்போது அதிகரித்துக்கொண்டு செல்வது உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

இவ்வாறு கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்து தீவிர பரவலை ஆரம்பித்துள்ளது.

இதுவரை, பிரான்சில் நாளுக்கு நாள் 500 பேர்வரை மரணித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் உலக நாடுகளில் இதுவரை இல்லாதவாறு ஆயிரத்து 355 மரணங்கள் பதிவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 387 ஆகப் பதிவாகியுள்ளதுடன் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 116 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு 59 ஆயிரத்து 105 ஆக மொத்த பாதிப்பு காணப்படுகிறது.

மேலும், அங்கு 6 ஆயிரத்து 399 பேர் வைரஸாரல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 ஆயிரத்து 428 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று ஒரேநாளில் 961 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்த மரணங்கள் 10 ஆயிரத்து 348 ஆகக் காணப்படுகிறது.

மேலும், ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் புதிய நோயாளர்களாக 7 ஆயிரத்து 947 பேர் பதிவாகியுள்ளனர். அங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதுடன் 26 ஆயிரத்து 743 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இத்தாலியிலும் நாளுக்கு நாள் கடும் மனித உயிரிழப்பு ஏற்பட்டுவருவதுடன் நேற்று ஒரேநாளில் 760 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய நாடுகளை விடவும் அதிக உயிரிழப்புக்கள் இத்தாலியில் ஏற்பட்டு 13 ஆயிரத்து 915 ஆக மொத்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், அங்கு ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 242 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று 4 ஆயிரத்து 668 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட அமெரிக்காவில் வைரஸ் தொற்று அசர வேகத்தில் பரவி வருவதுடன் நாளுக்கு நாள் 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 29 ஆயிரத்து 874 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்த பாதிப்பு 2 இலட்சத்து 44 ஆயிரத்து 877 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழப்பு 968 ஆகப் பதிவாகியுள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 70 ஆகப் பதிவாகியுள்ளதுடன் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு மட்டும் உயிரிழப்பு 2 ஆயிரத்து 538 ஆகப் பதிவாகியுள்ளது.

மொத்தமாக 93 ஆயிரத்து 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நியூஜெர்ஸி மாநிலம் அடுத்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 537 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து, பிரித்தானியாவிலும் வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்து நேற்று ஒரேநாளில் மாத்திரம் 569 பேர் மரணித்துள்ளனர்.

அங்கு மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 921 ஆகப் பதிவாகியுள்ளதுடன் 33 ஆயிரத்து 718 பேர் மொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஷபுதிய நோயாளர்களின் வரவும் அதிகரித்துள்ள நிலையில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 244 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஜேர்மனியிலும் அதிக மரணங்களை ஒவ்வொரு நாளும் கொரொளா வைரஸ் ஏற்படுத்திவருகின்ற நிலையில் அங்கு நேற்றுமட்டும் 176 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், மொத்த பாதிப்பு அங்கு 84 ஆயிரத்து 794 ஆகக் காணப்படுகின்ற அதேவேளை, நேற்று 6 ஆயிரத்து 813 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஈரானில் நேற்று மட்டும் 124 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 160ஆகப் பதிவாகியுள்ளது.

அங்கு மொத்தமாக 5 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 956 பேர் தீவிர நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நெதர்லாந்தில் நேற்று 166 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 697 ஆகப் காணப்படுகிறது. மேலும், பெல்ஜியத்திலும் நேற்று ஒரே நாளில் 183 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.

இதனைவிட, கனடாவில் இதுவரை இல்லாதவாறு 59 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதுடன் அங்கும் கொரோனா வைரஸ் திவிரப் போக்கை காட்டத்தொடங்கியுள்ளது.

மேலும், பிரேஸிலில் நேற்று மட்டும் 82 பேர் மரணித்துள்ளதுடன், சுவீடனில் 69 பேரும் ரோமானியாவில் 23 பேரும் ஈக்குடோரில் 22 பேரும் நேற்று உயிரிழந்துள்ளதுடன் அல்ஜீரியாவில் 28 மரணங்கள் ஒரேநாளில் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி, சீனாவின் வுஹான் நகரில் நிமோனியா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் குறித்து 280 பக்கம் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் 27 பேர் உயிரிழந்ததாக முதன் முதலில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 100 நாட்கள் நகர்வதற்குள் இந்த கொரோனா வைரஸ் உலகத்தின் தலையெழுத்தையே தலைகீழாக புரட்டிவிட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான கண்டுபிடிப்பில் முன்னேற்றம் காணப்படாமையால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை இழக்க நேரிடலாம் என்னும் அச்சம் தொடர்ந்துசெல்கிறது.