மீண்டும் தேசிய அரசு? – ராஜபக்சக்களுடன் சஜித் தரப்பு பேச்சு

0 hh
0 hh

இலங்கையில் மீண்டும் தேசிய அரசு அமைப்பது தொடர்பாக திரைமறைவில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. சஜித் தரப்பு இதற்கான யோசனையை ராஜபக்சக்களிடம் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது. ராஜபக்சக்கள் தரப்பு இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த யோசனையை எதிர்க்காது என்று கூறப்படுகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலும் மேலும் பிற்போடவேண்டிய சூழல் எழுந்துள்ளதையும் இதனால் நாடாளுமன்றம் கூட்டும் திகதி தொடர்பில் சட்டச் சிக்கல் எழவுள்ளமை பற்றியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கு சாதகமான சமிக்ஞை ராஜபக்சக்களிடமிருந்து சஜித் தரப்புக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. சஜித் தரப்பின் முக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லகூட, அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே  தேசிய அரசு அமைப்பதற்காள யோசனையை சஜித் தரப்பு முன்வைத்துள்ளதாகவும், நாடாளுமன்றைக் கூட்டாமல் இருப்பதால் எழக்கூடிய சட்டச் சிக்கலைத் தீர்க்கவும் , கொரோனா ஒழிப்பில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படவும், அரசு இயங்குவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறவும் தேசிய அரசே ஒரே வழி என பொதுஜன பெரமுன் பிரமுகர்களும் கருதுவதாகக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் பெரும்பாலும் இடர்கால நிலையைக் கருதி தேசிய அரசு ஒன்று தற்காலிகமாக அமைக்கப்படலாம் எனக் கொழும்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.