பொதுத்தேர்தலை வெகு விரைவில் நடத்துவதே எனது எதிர்பார்ப்பு: கோட்டாபய ராஜபக்ச

92059971 1564516137047029 6223862135408033792 o
92059971 1564516137047029 6223862135408033792 o

“இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாகக் கருதவில்லை. அவசரகாலச் சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் முடியாது. ஆகவே, நாடாளுமன்றத்தை மீளக் கூட்டும் நிலைப்பாட்டில் நான் இல்லை. வெகு விரைவில் பொதுத்தேர்தலை நடத்துவதே எனது எதிர்பார்ப்பு.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.  

ஜனாதிபதி தலைமையிலான அரசின் பிரதான அமைச்சர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கிடையில் நேற்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது சஜித் பிரேமதாஸ கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்குப் பதில் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் நாட்டில் அவசர சட்டமொன்றை உருவாக்கிக்கொள்வது தவிர்ந்து வேறு எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.

அரசியல் அமைப்பில் அதற்கான இடமில்லை. அவரச நிலைமையைப் பிரகடனப்படுத்த எந்த நோக்கமும் எனக்கில்லை. தற்போது நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை உருவாக்கியிருக்கின்ற காரணத்தால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு என்னிடம் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்போது தேர்தலை நடத்த முடியாது, ஆகவே, முதலில் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்த்துள்ளேன். ஆகவே, தேர்தல் ஒன்றினை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கி வெகு விரைவில் தேர்தலை நடத்தவே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆகவே அதற்கிடையில் நாடாளுமன்றம் கூட்டப்படாது” – என்றார்.