ஒரு தொகை மதுபான போத்தலுடன் கல்குடாவில் சிக்கிய நபர்!

.jpg
.jpg

கல்குடா பொலிஸ் பிரிவிட்குற்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்ட விரோதமான முறையில் வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான போத்தல்களை கல்குடா பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தெரிவித்தார்.

மேலும் பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து மட்டக்களப்பிற்கு வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கும்புறுமூலை என்னும் இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது 50 மதுபான போத்தல்களும், 95 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சட்டவிரோத செயல் முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரும், வாகனமும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாகவும் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இக்கடத்தல் சம்பவத்தை ஜ.பி. நாகரத்ன விதானகே தலைமையில் சார்ஜன் ஏ.எம்.அசோக மற்றும் பி.சி.ஜனார்த்தன் ஆகியோர் கொண்ட குழுவினரால் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் மதுபான கடைகள் அனைத்தும் மூடிக் காணப்பட வேண்டும் என்று அரசு தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.