கொரோனாவின் தொற்றிலிருந்து மீண்டது நான்கு மாதக் குழந்தை!

baby
baby

இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் – நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தை பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியது.

குறித்த குழந்தையின் பாட்டன் ஊடாக அக்குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில், கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில்  சிறுவர் பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அக்குழந்தை பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியது என அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த குழந்தை உள்ளிட்ட அந்தக் குடும்பத்தின் ஐவருக்கு கொரோனா தொற்றிருப்பது கடந்த மாதம் 29 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 11ஆம் திகதி வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் சென்னைக்குச் சென்ற நாத்தாண்டிய பகுதி நபர் ஒருவர் மீள 12 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.

குறித்த நபருக்கு கடந்த 27 ஆம் திகதி காய்ச்சல் ஏற்படவே அவர் மாரவில வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் 28ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் தான் இந்தியா சென்று வந்தமையை சுகாதார அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ அறிவிக்காமல் ஊர் முழுதும் சுற்றியுள்ளதாகவும், கொழும்புக்கும் வந்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 14 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் அவரது குடும்ப அங்கத்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 29ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

அதன்படி அவர்கள் உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட  இந்தியா சென்ற வந்த தொற்றாளரின் மனைவி,  இரு இளம் பிள்ளைகள்,  மகள் ஒருவரின் 4 மாத குழந்தை ஆகியோருக்கே இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.  இந்நிலையில் தற்போதும் அந்தக் குடும்பம் வசித்த நாத்தாண்டியா பகுதி முற்றாக முடக்கப்பட்டு  அப்பிரதேச மக்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன்  குடும்பத்துக்கு குறித்த தொற்று பரவல் ஏற்பட காரணமாக இருந்த பிரதான தொற்றாளர் சென்று வந்ததால், குளியாப்பிட்டிய – கட்டுபெத்த, கெக்குனுகொல்ல பகுதியிலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே சிகிச்சை பெற்று வந்த 4 மாத குழந்தை இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியது.

குழந்தையுடன் சிகிச்சைகளின்போது  அதன் தாயும் தங்கியிருந்த நிலையில், தற்போதும் தாயும் குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களுக்கு 14 நாட்கள் மீள தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாத்தாண்டிய பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.