பதினொரு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 7
625.500.560.350.160.300.053.800.900.160.90 7

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பதிகாரியுமான ஏ.எல். ஜகுபர் சாதிக் தெரிவித்தார்.


“யாழ்ப்பாணம், மல்லாகம் சுன்னாகம், ஆவரங்கால், பருத்தித்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இரண்டு குழுக்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.


இதன்போது நாட்டு அரிசியை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்கள் 7 பேருக்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகவும் பொருள்களில் பொறிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையிலும் பார்க்க கூடிய விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலைகளை மீறி பாவனையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மேலும் தெரிவித்தார்.