மணிவண்ணனை கழட்டிவிடத் தயாராகும் கஜேந்திரகுமார்?

v.manivannan
v.manivannan

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரை தமது அணியிலிருந்து விலக்குவதற்கு கஜேந்திரகுமார் தரப்பு முடிவெடுத்துள்ளதாக உள்கட்சி வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன.

தங்கள் பரம்பரைக் கட்சியைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைக் கஜேந்திரகுமார் பாவிப்பதாக பல காலமாக பல தரப்பிடமிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. அண்மைக்காலமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதியப்படவேண்டும் என உள்ளுக்குள் இருந்தே அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த அழுத்தக்குழுவின் பின்னணியில் மணிவண்ணன் மற்றும் பார்த்தீபன் தரப்பு இருப்பதாக கஜேந்திரகுமாரின் தீவிர விசுவாசிகள் நம்புகின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக மணிவண்ணன் மற்றும் பார்த்தீபனின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுநிற்கின்றன.

கஜேந்திரகுமாரைவிட அதிக செல்வாக்கானவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதியப்படவேண்டும் என்ற நிலைப்பாடுடையவர்கள் கட்சியில் இருப்பதை கஜேந்திரகுமாரின் தாயாரும் விரும்புவதில்லை. இதன் ஆரம்பகட்டமாக கஜேந்திரகுமாரின் தீவிர விசுவாசிகள் மணிவண்ணன் மற்றும் பார்த்தீபனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அவர்களைத் துரோகியாக்கி கட்சியைவிட்டு அகற்றும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இச் செயற்பாடுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.