தேர்தலை நடத்தும் எண்ணத்தை உடனே கைவிட வேண்டும்!

0 ad
0 ad

“கொரோனாவைக்  கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியும் அரச தரப்பும் பெற்றுக் கொண்ட நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அரசின் முஸ்தீபுகள் அமைகின்றன. எனவே, தேர்தலை விரைந்து நடத்தும் எண்ணத்தை உடனே கைவிட்டு, கொரேனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

“தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தேர்தல் காரணமாகத் தளர்த்தப்படுமானால் கொரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்படும். இன்றைய நிலையில் மக்கள் தமது அன்றாட உணவைப் பெற்றுக்கொள்வதில் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் வலுக்கட்டாயமாகப் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அதில் மிகக் குறைவான மக்களே வாக்களிக்க முன்வருவர். இது ஒரு ஜனநாயக மரபுகளைக் கொண்ட தேர்தலாக அமையாது. எனவே, இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“உயிரிழப்புகளால் உலகமே முடங்கியிருக்கின்ற தருணத்தில் செய்வது அறியாது பேரரசுகள் கலங்கிப் போயிருக்கும் நிலையில் நாம் மட்டும் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் கொள்வது சாலச்சிறந்தது ஆகாது.

ஏன் இந்த அவசரம் அரசுக்கு எழுந்துள்ளது என்பது தற்போது கேள்விக்குறிய ஒன்றாகவும் உள்ளது. தமது வெற்றி இலக்கை நோக்காகக் கொண்டே அரசு தேர்தலை நடத்த முற்படுகின்றது என்ற ஐயம் எழுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

இன்றைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் அது பக்கச்சார்பான தேர்தலாகவே அமையும். அரச இயந்திரங்கள் யாவும் அரசின் கட்டுப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு செயற்படும் அபாயமும் ஏற்படலாம். இது தேர்தல் குறித்த ஜனநாயகப் பாரம்பரியங்களைச் சின்னாபின்னமாக்கும் வழிமுறை என்பதும் நோக்கத்தக்கது.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலை வலுக்கட்டாயமாக நடத்தும் எண்ணத்தை அரசு உடனே கைவிடவேண்டும். இது குறித்த தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தெளிவாகத் தெரிவித்துள்ளது. எமது நிலைப்பாடு போன்றே ஏனைய அரசியல் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.

எனவே, துரிதமாகத் தேர்தலை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டு கொரானாவை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தும் வேலைத் திட்டங்களை விரைந்து மேற்கொண்டு மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” – என்றுள்ளது.