இலங்கையில் கொரோனா வைரஸ் 269 ஆக அதிகரித்துள்ளது!

4 7Y 1
4 7Y 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.


இன்று (19) மாத்திரம் 15 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு, வாழைத்தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதையடுத்து வாழைத்தோட்டத்தில் குறித்த பெண் உள்ளிட்ட 25 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணாலே அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடந்த 15ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அவர் கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி தனது, கணவர் மற்றும் மூத்த புதல்வருடன் தம்பதிவ யாத்திரைக்கு நுகேகொடையிலுள்ள முகவர் ஒன்றின் மூலம் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த அவர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகவீனமுற்ற நிலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அன்றைய தினமே (15) உறுதிப்படுத்தப்பட்டது.


குறித்த பெண் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவரின் வீடு அமைந்துள்ள வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியிலுள்ள 58 வீடுகள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டதோடு, அப்பகுதியைச் சேர்ந்த பலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.


குறித்த பெண்ணுடன் தம்பதிவ யாத்திரைச் சென்று வந்திருந்த அவரது கணவர் மற்றும் மூத்த புதல்வர் மற்றும் வீட்டிலிருந்த இளைய புதல்வருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, நேற்று (18) கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 06 பேர், தம்பதிவ யாத்திரைச் சென்று திரும்பிய குறித்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் வீட்டிலுள்ள 02 பேர், அவ்வீட்டுக்கு அடுத்துள்ள வீட்டைச் சேர்ந்த 2 பேர், அவ்வீட்டுக்கு அண்மையிலுள்ள இரு மாடிகளைக் கொண்ட வீட்டிலுள்ள இரு குடும்பங்களைச் சேர்ந்த 02 பேர் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் என 15 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதற்கமைய வாழைத்தோட்டப் பகுதியிலிருந்து இதுவரை 25 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் குறித்த பெண்ணைத் தவிர ஏனைய 24 பேரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொரோனா பரவல் ஆரம்பித்ததன் பின்னர் இவ்வாறு ஒரே பகுதியில் அதிகளவில் வைரஸ் தொற்றை கொண்ட குழுவினர் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் ஒரே நாளில் 21 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்பின்னர் ஏப்ரல் 14ஆம் திகதி 15 பேர் இனங்காணப்பட்டனர். அதன்பின்னர் இன்றைய தினமே ஒரே நாளில் கூடுதல் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.


இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஐவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 171 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.