34 ஆயிரத்து 500 பேர் ஒரு மாதத்தில் கைது

6 h
6 h

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா,களுத்துறை ,புத்தளம் , வரக்காப்பொல, அலவத்துகொட  மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளுக்குத் தளத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு வார நாட்களில் இரவு 8 மணிமுதல் காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுமே இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி முறையற்று செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் விநோத பயணங்கள், உற்சவங்கள், விநோத நிகழ்வுகள் மற்றும் யாத்திரைகள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம். இந்தக் காலப்பகுதியை உற்பத்தி செயற்பாடுகளுக்காகப்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதற்கமைய இன்று செவ்வாய்கிழமை வரையிலான 24 மணித்தியாலயத்துக்குள் மாத்திரம் 650  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 165 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் 34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன” – என்றார்.