பொலனறுவை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் பாதிப்பு !

3 s 4
3 s 4

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 16 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக பொலனறுவை – புலஸ்திகம பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று பொலனறுவை வைத்தியசாலையில் நேற்று (22) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து பதிவாகிய முதல் கொரோனா வைரஸ் தொற்றாளராவார். இதையடுத்து கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 330 ஆகக் காணப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 120 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 58 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கேகாலை மாவட்டத்தில் 04 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குருநாகல், மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 09 மாவட்டங்களில் இன்னும் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.