மாணவர்களை அழைத்துவர இந்தியா சென்றது விமானம்

1 sdw
1 sdw

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று இன்று (23) காலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இன்று காலை 6.15 மணியளவில் UL 1145 எனும் இலக்கம் கொண்ட விமானம், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்குப் புறப்பட்டுள்ளதோடு, இவ்விமானம் இன்று பிற்பகல் 2.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்ட குறித்த விமானத்தில் இரு விமானிகள் உட்பட 08 பேரைக் கொண்ட குழுவினர் பயணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவின் அமிர்தசரஸ் மற்றும் கோயம்புத்தூரிலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலும் நேபாளத்தின் காத்மண்டுவிலும் சிக்கியுள்ள 433 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் (21) லாஹூரில் 93 பேரும், கராச்சியில் 20 பேரும் என 113 பேர் அழைத்து வரப்பட்டனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானங்கள் மூலம் இவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோயம்புத்தூர் நகரிலிருந்து 117 பேரும், நேபாளத்தின் காத்மண்டு நகரிலிருந்து 93 பேரும் நாளை 24ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என்று ஶ்ரீலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட விமானங்களை இயக்குவது தொடர்பில், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால், உரிய மாநிலங்களின் விமான சேவையிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளவர்கள், கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று (23) அதிகாலை 4.45 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 226 விமானத்தில் இலங்கையர்கள் இருவர் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த இருவரினதும் பயணப் பொதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.