அம்பாறை மாவட்ட தபால் சேவை வழமைக்கு திரும்பியது

IMG 20200424 104240
IMG 20200424 104240

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு  மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை  கடந்த புதன்கிழமை(22)  முதல்  வழமை நிலைக்குத் திரும்பியுள்ளது.மார்ச் மாதம் 16ஆம் திகதி தொடக்கம்  தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.தற்போது சில மாவட்டங்கள் தவிர்ந்து ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டு  சுமூகமான நிலை ஏற்பட்டு வருவதையிட்டு  தபால் திணைக்களத்தின் சேவைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதோடு  தபால் விநியோகமும்  வழமை போன்று இடம்பெற்றது.
இதன் படி வெள்ளிக்கிழமை(24) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் அலுவலகங்கள் தொற்று நீக்கப்பட்டு  கரும பீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் கை கழுவுதல்  சமூக இடைவெளிக்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 இம்மாவட்டத்தில் உள்ள தபாலகங்களுக்கு கொழும்பில் இருந்து தபால் பொதிகள் வந்த வண்ணம் உள்ளது .எனினும் அவற்றை  விநியோகம் செய்வதில் அச்ச நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும்  யாழ்ப்பாண மாவட்டத்தில்  இருந்து எதுவித தபாற்பொதிகளும் இங்கு கொண்டு  வரவில்லை.அத்துடன் வழமை போன்று  புகையிரதத்தில் தபால் சேவை இடம்பெறவில்லை எனவும்  தபால் திணைக்களத்திற்குரிய பிரத்தியேக வாகனத்திலே தான்  தபால் சேவை இடம்பெறுகிறதை தபாலக உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,ஒலுவில், பாலமுனை அஞ்சல் அலுவலகங்களில்   செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுவதை காண முடிகிறது.