இலங்கையின் தற்போதைய நிலவரம்

3 rr 4
3 rr 4

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் தனது வீரியத்தை நாளுக்கு நாள் காட்டி வருகின்றது. இலங்கையில் இதுவரை 420 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 52 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 மணிவரை 49 பேரும், அதன்பின்னர் இரவு 11.50 மணியளவில் மேலும் மூவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை நாளிலும் நேற்றே அதிக கொரோனா நோயாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 52 பேரில் 30 பேர் வெலிசறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படைச் சிப்பாய்கள், 10 பேர் விடுமுறைக்காக வெலிசறை முகாமிலிருந்து வீடு சென்ற கடற்படைச் சிப்பாய்கள் (குருநாகல் – 03, அனுராதபுரம் – 02, இரத்தினபுரி – 01, பதுளை – 01, மொனராகலை – 01, களுத்துறை – 01, மாத்தளை 01), 11 பேர் பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் (கொழும்பு டி சொய்ஷா வைத்தியசாலையில் நேற்று மாலை இவருக்குப் பிறந்த குழந்தை இறந்தது) என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 420 பேரில் தற்போது 297 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 116 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 247 பேர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.