வெலிசறை முகாமில் பி.சி.ஆர். மேலும் பலருக்குக் கொரோனா

3 rr 6
3 rr 6

வெலிசறைக் கடற்படை முகாமுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியதையடுத்து அங்குள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று மாலை வரை அந்த முகாமைச் சேர்ந்த 75 சிப்பாய்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவர்களில் 64 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள்ளும், 11 பேர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றுள்ள நிலையிலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும், அனைவரும் வைத்தியர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த முகாமில் உள்ள அனைத்து சிப்பாய்களையும் கொரோனாச் சோதனைக்குட்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

இதன்படி 4 ஆயிரம் கடற்படை சிப்பாய்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஒரே இடத்தில் கூடுதல் எண்ணிக்கையாளருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது முதல் தடவையாகும்.

இதன் முதல் கட்டமாக 400 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய நேற்று பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டடன.

நேற்று மாலை வரை அந்த முகாமைச் சேர்ந்த 75 சிப்பாய்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவும் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. எனினும், கொரோனவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் உண்மையான மொத்த எண்ணிக்கையை நேற்று நள்ளிரவு வரை சுகாதார அமைச்சோ அல்லது இராணுவத் தரப்போ வெளியிடவில்லை.

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதால் வெலிசறைக் கடற்படை முகாமிலுள்ள சிப்பாய்கள் பெரும் பதற்றத்துடன் இருக்கின்றனர்.