இலங்கையில் கொரோனோ 452!

1 m
1 m

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 32 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 32 பேரில் 07 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் 4 பேர் வெலிசறை கடற்படை முகாமில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சிப்பாய்களாவர்.

அதேவேளை, வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த மேலும் ஒரு சிப்பாய் மொனராகலை வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுமுறையில் வீடு சென்றிருந்தபோது சுகயீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து மொனராகலையில் இவரின் வீட்டிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 52 பேர் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் இதுவரை ஒரே நாளில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக அது பதிவானது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 452 பேரில் தற்போது 327 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 247 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.