இந்தியாவில் பருத்தித்துறை மீனவர்கள் கைது!

Courts
Courts

இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மீனவர்கள் மூவரின் நிலை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ்தரன் அனுமதியளித்து உத்தரவிட்டார்.

பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து கடற்தொழிலுக்கு நேற்றுமுன்தினம் கடந்த இரண்டாம் திகதி சென்ற மீனவர்கள் மூவர் கரை திரும்பவில்லை. அவர்கள் காணாமல் போனதாக உறவினர்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

பருத்தித்துறை அல்வாய் வடக்கு நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த சந்திரநாத் அர்ஜூன்நாத் (வயது-32), விஜயகுமார் விதுசன் (வயது -20), அன்ரன் புதுமைநாயகம் விதுர்சன் (வயது -17) ஆகிய மூவருமே இவ்வாறு காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இவர்கள் நேற்று உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுதொடர்பில் பொலிஸாருக்கு உறவினர்களால் அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் இன்று ஏ அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில் “காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக அந்த நாட்டு கடற்படையினரிடம் மீனவர்களின் நிலையைக் கண்டறிவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கவேண்டும்” என்று பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று பதில் கடமையாற்றிய மாவட்ட நீதிபதி சி.சதீஸ்தரன், பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.