உதவிகளை வழங்கி தவறிழைத்து விட்டோம்: மட்டுஅரச அதிபர் உதயகுமார்

uthyakumar
uthyakumar

மக்களுக்கு உதவிகளை வழங்குவதன் ஊடாக சமூகம் பிழையான வழிநடத்தலுக்கு சென்று விட்டதாக எண்ணத் தோன்றுவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “யுத்தத்தின் போதும் இயற்கை இடர்கள் ஏற்படும்போதும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய நிலையில் அவ்வாறு வழங்கப்பட்ட உதவிகளினூடாக சமூகம் பிழையான வழி நடத்தலுக்கு சென்று விட்டதா என்று கருதவேண்டியுள்ளது.

மக்கள் இன்னமும் எதிர்பார்ப்பில் தங்கி வாழும் மனநிலையில் உள்ளவர்களாக இருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு அழிவுகள், இயற்கை இடர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இழப்புக்களையும் துன்பங்களையும் சுமந்தவர்களாக மட்டக்களப்பு மாவட்ட சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு குடும்பத்திலும் துயரம் மிகு சம்பவங்கள் ஏராளமாக நடந்தேறியிருக்கின்றன. வறுமை, கடன் சுமை, பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், சமூகப் பிரச்சினைகள், தற்கொலைகள், போதைப் பொருள் பாவினை இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் மக்களை ஆக்கிரமித்துள்ளன.

அதன் காரணமாகத்தான் இப்பொழுது பல்வேறு வகையான சிக்கல்கள் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளன. இவற்றிற்கு மத்தியிலே நாங்களும் பல்வேறு வகையான விடயங்களில் தவறிழைத்திருக்கின்றோமா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

பாடசாலை செல்லும் மாணவர்களின் கைகளிலே ஒன்றுக்கு இரண்டு கைப்பேசிகள் உள்ளன. இந்த நவீன தகவல் தொழினுட்ப யுகத்தை நன்மைக்குப் பயன்படுத்திக் கொண்டால் அதில் தவறேதும் இல்லை. ஆனால் சாதகங்களுக்குப் பதிலாக பாதகங்களை இறக்குமதி செய்து கொள்வதால் சீரழிவுகள் ஏற்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.