11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் !

IMG 5678 scaled
IMG 5678 scaled

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம்(மே 18) உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது .

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்த அருட் தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் கூறும்போது .
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை நாங்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க இருக்கின்றோம் . ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் மூலம் ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவித்தலில் படி நாளையதினம் குறித்த நேரத்துக்கு உரிய ஒழுங்குமுறையின் படி நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளது .

இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்குழுவுக்கு விடுக்கபட்ட அழைப்பின் பேரிலே பொலிஸ் நிலையம் சென்று கொரோனா தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் நாளையதினம் எவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய போகின்றோம் என்பதனை விளக்கி கூறியிருந்தோம் .

நாளை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் அகவணக்கம் , பொதுச்சுடர் ஏற்றல் ,ஏனைய சுடர்கள் ஏற்றல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரகடனம் , மலர் அஞ்சலி போன்ற நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இன்றைய நிலையில் முழு உலகையும் அச்சுறுத்திவரும் கோவிட் 19 நிலைமைகளுக்கு மத்தியில் எமது நாட்டின் சுகாதார விதிகளுக்கு ஏற்ப நாங்கள் இந்த நிகழ்த்த வேண்டும் என்பதனை பொலிஸார் எமக்கு அறிவித்துள்ளார்கள் என்பதனை மக்களுக்கு அறிய தருகின்றோம்.

இதன்படி இந்த நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை சரியாக 10.30 மணிக்கு ஆரம்பமாகும் . கொரோனா தொற்றுகளுக்கு உள்ளாகாத வகையில் எமது இந்த நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாக இருக்கிறது என்பதனை எமது மக்களுக்கு வினயமாக அறியத்தருகின்றோம். இதன்படி குறிப்பிட்ட அளவு மக்களை மட்டும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க பொலிஸார் அனுமதித்திருக்கிறார்கள். எனவே முடியுமானவர்கள் உங்கள் உங்கள் இல்லங்களிலேயே இந்த அஞ்சலி நிகழ்வை முன்னெடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம். ஏற்கனவே நாம் அறிவித்திருந்ததுக்கு அமைய நாளை இரவு 7மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஓசை ஒலிக்க செய்து வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலிக்குமாறு கேட்டு நிற்கின்றோம் . மேலும் முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலை நாளை நினைவுகூர்ந்து ஒரு நேர உணவாக ஒவ்வொருவீடுகளிலும் முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சியை எடுத்துக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் . என அவர் தெரிவித்தார் .