முள்ளிவாய்க்கால் : அகக்காயத்தை ஆற்ற நீதியே தேவை

mulli
mulli

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை. ஈழத்தில் அறுபது ஆண்டுகளாக தொடரும் இன ஒடுக்குமுறையின், முப்பது ஆண்டுகளாக தொடர்ந்த இன அழிப்பின் உச்சமான குரூரமே முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு கொடிய நினைவாக, வடுவாக தரித்து விட்டது. நான்காம் ஈழப் போரின் இன அழிப்புச் செயல்கள் 2006ஆம் ஆண்டு கிழக்கில் திருகோணமலையிலேயே தொடங்கிய நிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரியளவில் இனப்படுகொலை நடந்தது.

நான்காம் ஈழப் போரின் இன அழிப்புச் செயல்களை மாத்திரமின்றி முப்பதாண்டு காலமாக சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளின் குறியீடாக முள்ளிவாய்க்கால் மே மாதம் கருதப்படுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்த இலங்கை அரசு பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டது. போர் தர்மங்களுக்கு மாறாக சூழ்ச்சிகள் மூலமாகவே விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியும் என்று சிங்கள அரசு திட்டமிட்டது. குறிப்பாக அதிகளவான மக்களை கொன்று பாரிய அளவில் நிலை குலைதலை ஏற்படுத்தி அறம் பிழைத்த போரில் வெற்றியை கைப்பற்றியது.

இதனால் போர் தவிர்ப்பு வலயங்களை அறிவித்து சர்வதேசத்திற்கு நல்ல முகத்தை காட்டிக் கொண்டு, போர் தவிர்ப்பு வலயங்களில் தஞ்சம் புகுந்த மக்களின் மீது கடுமையான இனப்படுகொலைத் தாக்குதல்களை நடாத்தியது. நச்சுக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் முதலிய தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியும் மக்களை இனப்படுகொலை செய்தது. போரின் போது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் தமிழ் மக்களையும் அழித்து ஒழித்துவிடுவதில் இலங்கை அரசு மிகவும் தீர்மானமாக இருந்தது.

விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதும் தமிழ் மக்கள் அழிந்து ஒழிந்துபோக வேண்டும் என்பதும் இனி ஒருபோதும் தனி நாடு கேட்டு தமிழ் மக்கள் போராட்டம் நடாத்த முன்வரக்கூடாது என்றும் இனத்தின் எண்ணிக்கையிலும் இனத்தின் மனதிலும் வீழ்ச்சியை ஏறப்டுத்த இவ்வாறு மூர்க்கமான போர் தர்மங்களை மீறிய வகையில் இனப்படுகொலை நடாத்தப்பட்டது. அதற்குப் பிறகு, வெறும் ஆயிரக் கணக்கான மக்களே இறந்தனர் என்றும் அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்றும் சிங்கள அரசு முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைக்க முற்பட்டது.

போரில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று மன்னார் மாவட்ட கிறிஸ்தவ ஆயர் இராயப்பு யோசப்பு ஆதாரங்களுடன் தெரிவித்தார். அதுவும் ராஜபக்சேவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் அதனைக் குறிப்பிட்டார். அத்துடன் நடைபெற்ற இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் மன்னார் ஆயர் வலியுறுத்தினார். கொத்துக் கொத்தாக மக்கள்  கொல்லப்பட்டபோதும் அது தொடர்பான புள்ளி விபரங்களை இலங்கை அரசு மூடி மறைத்தது. எனினும் விடுதலைப் புலிகள் கால வன்னி மக்களின் சனத் தொகைக்கும், சிங்கள அரசின் முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்ட சனத்தொகைக்கும் இடையில் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாதிருந்தனர்.

இனப்படுகொலை என்றால் என்ன? ஒரு இனத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, சமயம் மற்றும் அதன் இன வேறுபாடுகளின் நிமித்தம், தேசிய இனம் என்ற காரணங்களின் நிமித்தம் கொல்ல நினைப்பதும் அழிப்பதுமாகும். 1948 இல் ஐ நா சட்ட விதி 2 இன்படி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதனை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக அறிவித்தது. ஆனால் அதனை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் இந்த உலகம் தங்கியமை காரணமாக உலகத்தின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் இனப்படுகொலைகள் சுதந்திரமாக நிகழ்ந்ததன. அதில் ஒன்றாகவே ஈழ இனப்படுகொலைகளும் முள்ளிவாய்க்காலும் நடாத்தப்பட்டது.

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துவது, கொலை செய்யதிட்டமிடுவது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும் என வரையறுக்கப்படுகிறது. இதற்கான முள்ளிவாய்க்காலின் அத்தனை சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காணொளிக் காட்சிகளும் உலகமெங்கும் அம்பலம் செய்யப்பட்டபோதும் தமிழர் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்வதில் உலகப் பொதுமன்றங்கள் பின் நிற்கின்றன.

மானுட வரலாற்றில் மனித இனம் வெட்கித் தலைகுனியும் மிகப் பெரும் இனப்படுகொலையாக ஈழத் தமிழர் இனப்படுகொலை கருதப்படுகிறது. ஆனால் உலகில் இனப்படுகொலைகள் நிகழ்கின்றபோது உலகின் பிராந்திய நலன்கள், மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அவை இனப்படுகொலையா இல்லையா என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த விடயத்தில் இதைப் போன்ற மானுட அவலங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஐ.நா போன்ற பொது அவைகளும் இந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோகின்றன.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அது முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் நடைபெற்றுள்ளதாகவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெப்ருவரி 10, 2015 அன்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை மூலமாக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம், சட்டம் மற்றும் அரசியல் துறை சார் வல்லுனர்களின் பங்களிப்புடன் உரிய ஆதாரங்கள், தரவுகள் திரட்டப்பட்டு இயற்றப்பட்டதாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது இனப்படுகொலை தீர்மான உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்ககம், வட மாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாததெனக்கூறியது. அத்துடன் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் உள்நாட்டு யுத்தம் ஒன்றே நடைபெற்றதாகவும் குறிப்பிட்டது. உலக அனுபவங்களின் படி ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட உண்மை. மாறி மாறி ஆட்சியமைக்கும் தேசிய கட்சியை சார்ந்தவர்கள் என்ற வகையிலும் கடந்த கால ஆட்சியில் பங்கு பற்றியவர்கள் என்ற வகையிலும் ஈழத் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகுறித்த கூட்டுப் பொறுப்பை இலங்கை அரசு, மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாது.

ஒரு மாபெரும் இனப்படுகொலையை, உலகறியப்பட்ட மாபெரும் அநீதியை மூடி மறைப்பதும் அவ்வளவு எளிதல்ல. ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலையால் சந்தித்த காயத்தை ஆற்றுவது என்பது ஒரு இனப்படுகொலையாக அதை ஏற்றுக்கொள்வதுடன் மீண்டுமொரு இனப்படுகொலை நிகழாத வகையில் உறுதியும் நியாயமும் நிரந்தரமும் கொண்ட அரசியல் சூழல் ஈழத்தில் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைக்காக, ஒடுக்குமுறையை எதிர்த்து தனி நாட்டிற்காக போராடிய ஒரு இனத்தை மிக கடுமையாக அழித்துவிட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்பது இனப்படுகொலையின் காயங்களை மேலும் பெரிதாக்கும் செயல்களே. ஈழத்தில், எதற்காக ஆயுதம் ஏந்தப்பட்டது? ஆயுதம் ஏந்திய போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது? அழிக்கப்பட்டவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருந்தது? எஞ்சியிருப்பவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருக்கிறது? அரசியல் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தை மாபெரும் இனப்படுகொலை மூலம் அழித்து அடக்கி ஒடுக்குவது எத்தகைய அணுகுமுறை? ஒடுக்குமுறைக்காக போராடிய இனத்தை இன மேலாதிக்கத்தால் அழித்தொழிப்பது மிகவும் கொடுமையான இன அழிப்பாகும். போரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் என்று ஈழமே நலிந்துவிட்டது. போரில் கண்களை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், கரங்களை இழந்தவர்கள், குறிகளை இழந்தவர்கள், உடலின் காயங்களுக்கு உள்ளானவர்கள் அனைவரது புறக்காயங்களும் ஆறிவிட்டன. ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினால் மாபெரும் அக காயத்திற்கு உள்ளான ஒட்டுமொத்த ஈழத் தமிழர்கள் இன்னும் சிதலுறூம் இருதயங்களுடன் வாழ்கின்றனர். சிங்கள அரசு நடந்த இனப்படுகொலைக்கு விசாரணை நடாத்தி ஒருபோதும் தீர்வினை தராது. அது தன்னை பாதுகாக்கும் வழிகளை தேடுகிறது. நம்பகமும் நீதியும் கொண்ட சர்வதேச தரப்பினரால் நடாத்தப்படும் விசாரணையே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதியை தரும். அந்த நீதியே ஈழத் தமிழர்களின் அக காயத்தை ஆற்றுவதாகவும் அமையும்.

-கவிஞர் தீபச்செல்வன்