இலங்கை போக்குவரத்து சபை காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் சவாரி

bus 2
bus 2

யாழ்ப்பாணம் – காரைநகருக்கு இடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தமை தொடர்பாக பொதுமக்கள் பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை (03) காலை யாழ்.பேருந்து நிலையத்தில் இருந்து காரைநகருக்கு சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று பொன்னாலை பாலத்தில், எதிரே வாகனங்களில் சென்ற பயணிகளை மோதித் தள்ளும் விதத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்போது குறித்த வீதியால் வாகனங்களில் சென்ற பலர், விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்தனர். குறித்த சம்பவத்தை பார்த்துவிட்ட மனம் பொறுக்க முடியாத ஒருவர் குறித்த பேருந்தை புகைப்படம் எடுக்க முற்பட்டபோது அவரை பேருந்து நடத்துநர் ஏளனமாக ஏசிவிட்டு சென்றார் என அவர் கவலையுடன் கூறினார்.

இந்த விடயத்தை பார்த்த பலர் இது தொடர்பாக பொன்னாலை சந்தியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரிடம் விடயத்தை தெரிவித்தனர் எனவும் கடற்படை அதிகாரி இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக கூறினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தில் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்துகள் தமக்கிடையே போட்டியிட்டு வீதிகளில் சவாரி செய்வதால் வீதிகளால் பயணிக்கும் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தொடர்கதையாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.