மட்டக்களப்பு செங்கலடி மத்தியஸ்த சபையின் நிருவாக சீர்கேடு

images
images

மட்டக்களப்பு செங்கலடி மத்தியஸ்த சபையின் (294) நிருவாக சீர்கேடுகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் கொடுக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மத்தியஸ்த சபை ஆணைக்குழு நீதியமைச்சின் செயலாளருக்கு அரசாங்க அதிபர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செங்கலடி மத்தியஸ்த சபையில் நிதி பிணக்குகள் என்ற வகுதிக்குள் செங்கலடி தேசிய சேமிப்பு வங்கியில் கடன் பெற்ற சவுக்கடி வீதி தளவாய், செங்கலடி என்ற முகவரியைச் சேர்ந்த திருமதி அமிர்தலிங்கம் ரேவதி என்பவருக்கு எதிராக கடன் அறவீடு தொடர்பில் அவ்வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பெயரில் கடனாளி மாதாந்தம் பணத்தை செலுத்துவதற்கு மத்தியஸ்த சபையில் உடன்பாடு காணப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கடந்த 24.3.2019 அன்று குறித்த கடனாளியால் வங்கிக்கு பணத்தை செலுத்துவதற்கு என ரூபா 5000 மத்தியஸ்த சபை உறுப்பினர் ஆன திரு.விமல்ராசா சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணம் உரிய காலத்தில் வங்கிக்கு செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இது தொடர்பில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட விசாரரணையில் இப்பணம் சுமார் 2 மாதங்களாக குறித்த உறுப்பினரிடம் இருந்துள்ளதுடன் 19.05.2019 அன்று மீண்டும் குறித்த கடனாளியிடம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் மத்தியஸ்த சபை உறுப்பினர் ஆன திரு.விமல்ராசா சிவகுமார் மற்றும் சபை உப தவிசாளர் திருமதி தங்கேஸ்வரி பஞ்சாச்சரம் ஆகியோர் தனது மத்தியஸ்த சபை கடமை பொறுப்பில் அசிரத்தையாகவும் கவனயீனமாகவும் இருந்துள்ளமை தெரியவருகிறது.

மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் உண்மையாகவும் நம்பகத் தன்மையுடனும் செயற்படுதல் வேண்டும். இதை இவர்கள் கடைப்பிடிக்க தவறியுள்ளனர். எனவே இவர்களுக்கு எதிராக எச்சரிக்கை கடிதம் ஒன்றை வழங்கி எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.