3 பேர் கொண்ட கும்பலை தேடி அனலைதீவு முற்றுகை

7ges
7ges

யாழ்.அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய 3 பேர் கொண்ட கும்பலை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.

நேற்றய தினம் குறித்த தீவில் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கின்றது. இதனை கடற்படையினர் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளனர்.

மேலும் முறுகலில் சம்மந்தப்பட்டவர்களை கடற்படையினர் விசாரித்தும் உள்ளனர். இதனையடுத்து இன்று காலை நேற்றைய முறுகலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடற்படை முகாமிற்கு சென்று

நிறை மதுபோதையில் கடற்படையினரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கடற்படைமுகாமிற்குள் நுழையவும் முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த கடற்படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரும் அவருடைய சகாக்கள் இருவரும் அனலைதீவில் உள்ள வைத்தியசாலையில் சிக்சை பெறுவதற்கென சென்றிருக்கின்றனர்.

இதனை அறிந்த கடற்படை அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடற்படை அதிகாரியுடன் பவ்வியமாக நடந்துகொண்ட குறித்த நபர்கள்,

அதிகாரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் பின்தொடர்ந்து சென்று கற்கள், போத்தல்களால் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர்.

இதில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல் நடாத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர். குறித்த நபர்களை தேடி தற்போது கடற்படையினர் தீவை முற்றுகையிட்டுள்ளனர்.

தீவுக்குள் நுழையவும், தீவிலிருந்து வெளியேறவும் தடை விதித்திருக்கும் கடற்படையினர் தீவு முழுவதும் சல்லடைபோட்டு தேடுவதாக கூறப்படுகின்றது.