சிவமோகனின் செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கண்டனம்

sivamokan
sivamokan

தமிழ் அரசுக்கட்சியின் எம்.பி சிவமோகன், தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்கள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரியாமல் தனக்கு நெருக்கமான ஒரு பெண்மணியை பிரதேசசபை உறுப்பினராக்கிய விவகாரம் நேற்று முந்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இதன் போது சிவமோகன், தமிழ் அரசு கட்சியின் பொருளாளர் கனகசபாபதி கூட்டணியை கடுமையான கண்டித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த நியமனத்தை உடனடியாக நிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசு கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் அரசு கட்சியின் பொருளாளர் பொ.கனகசபாபதியின் மூலம், வெற்றிடமான இடத்திற்கு சிவமோகன் தனக்கு நெருக்கமான பெண்மணியை நியமிக்கும் ஆவணங்களை தேர்தல் செயலகத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அவரது நியமனம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டும் விட்டது.

இதன்பின்னரே விடயத்தை அறிந்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முந்தினம் (Oct.8) நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பா, அல்லது கட்டாக்காலிகளின் கூடாராமா என காட்டாக கேள்வியெழுப்பினார்.

இப்படியொரு சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என மாவை சேனாதிராசாவும் தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நடவடிக்கை பிழையானது என புளொட் தலைவர் த.சித்தார்த்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கண்டித்தனர். ஏனைய உறுப்பினர்களும் கூட்டாக கண்டித்தனர்.

இந்த நியமனத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளரிற்கு அறிவுறுத்தினார்.