வடக்கு கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி விருப்புடன் உள்ளார் – ஆளுநர் சார்ள்ஸ்

2H5A0651 copy scaled
2H5A0651 copy scaled

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத்  தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வடக்கு மாகாண கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு விருப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் வடக்கு மாகாண மாணவர்களை மேம்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனம் ஒன்று உருவாக்கிய ஆங்கில மொழிச் செயற்றிட்ட அங்குரார்ப்பன நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.இளங்கோவன், மன்னார் மாவட்ட அரச அதிபர் யு.மோகன்றாஸ், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மு.து.பிறட்லி, மடு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.சத்தியபாலன், மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆளுநர் தெரிவித்ததாவது:-

“கல்வி ஒன்றுதான் ஒரு நாட்டையும் சமுதாயத்தையும் மாற்றுகின்ற முக்கியமான கருவி என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். நமது மாகாண பிள்ளைகளின் கல்வி மீது எனக்கு மிகுந்த அக்கறையுள்ளது. கல்வியையும் நிபுணத்துவத்தையும் இலங்கையின் ஏனைய பிற மாகாணங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பரப்பியவர்கள் நமது மாகாணத்தைச் சேர்ந்த கல்விமான்கள். அந்தக்  கல்விமான்களைக் கொண்டிருந்த நமது மாகாணத்தின் தற்போதைய கல்வியின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

நமது சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல கிராமங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை குறைந்துகொண்டிருக்கின்றது.

விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் போன்ற முக்கியமான பாடங்களை படிக்க மாணவர்கள் முன்வருவதும் குறைவடைந்து செல்வதால் பதவி வெற்றிடங்களை நிரப்ப முடியாதவொரு நிலையும் காணப்படுகின்றது.  

கல்வி இல்லாமல் எந்தவொரு நிர்வாகத்தையும் கட்டியெழுப்ப முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அந்தப் பயணத்தில் ஆசிரியர்கள் சுயவிருப்பத்துடன் இணைவதோடு மட்டுமல்லாது கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தி கல்வியுடன் வெளியுலக அறிவையும் மாணவர்களுக்கு வழங்கி நமது மாகாண வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

வாழ்க்கைக்கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும். மன உத்வேகத்துடன் ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். முக்கிய பாடங்களான விஞ்ஞானம், மருத்துவம், பொறியியற்துறையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். இனிவரும் பரீட்சைகளில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மாணவர்களை சித்தியடையச் செய்வதை இலக்காகக் கொண்டு அதிபர், ஆசிரியர் சமூகத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வடக்கு மாகாண வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க விருப்பத்துடன் இருக்கின்றார். நானும் உங்கள் தேவைகளை மாகாண சட்டதிட்டங்களுக்குட்பட்டும் மத்திய அரசிடம் கொண்டு சென்றும் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் என்னாலான பூரண ஒத்துழைப்புக்களை நல்குவதற்குத் தயாராகவே உள்ளேன்” – என்றார்.