பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 2

கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தபோது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை சோசலிசக் கட்சியினர் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றினார்கள் எனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் புபுது ஜயகொட, பொலிஸாரே கொரோனா சட்டங்களை மீறி செயற்பட்டார்கள் எனவும், தம்மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் அனைவரையும் தனிமைப்படுத்துமாறு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது என்ற அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தனவின் கருத்துக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு நபர் அல்லது குழுவைத் தனிமைப்படுத்த வேண்டுமா என்பதை சுகாதார அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும்; ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையோ இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை ஒடுக்குமுறைக்கான சாதனமாகப் பொலிஸாரும் அரச தரப்பினரும் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார்.

பொலிஸார் செயற்பட்ட விதத்துக்கு எதிராக அனைத்து சட்டவழிமுறைகளையும் பயன்படுத்தப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.