ஜனாதிபதித் தேர்தல் தவறை இப்போதாவது சரி செய்யுங்கள் – தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

udaya gammanpila  850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
udaya gammanpila 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விட வேண்டாம் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-பௌத்த – சிங்கள மக்களின் முழு ஆதரவுடன்தான் ஜனாதிபதிக் கதிரையில் கோட்டாபய ராஜபக்ச அமர்ந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் தாமரை மொட்டு சின்னத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதிலும், அந்த வாக்குகள் ‘அன்னம்’ சின்னத்துக்கே அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான முஸ்லிம் கட்சிகளும் விடாப்பிடியாக நின்றன. இறுதியில் அந்தக் கட்சிகள் தாம் நினைத்தை சாதித்தன. ஆனால், ‘அன்னம்’ சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முயன்ற தமிழ், முஸ்லிம்கள் இறுதியில் ஏமாற்றமே அடைந்தனர்.

எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் இந்தப் பொதுத்தேர்தலில் சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘மொட்டு’ சின்னத்துக்கு வாக்களிக்க அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

ராஜபக்சக்களின் இந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் செயற்படுவோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.