ஈஸ்டர் தாக்குதல்கள்: மைத்திரி தடுக்காதமைக்கான காரணத்தை வெளியிட்டார் கிரியெல்ல

unnamed 4 3

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைத்தபோதிலும் மைத்திரி எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு காரணம், அப்போதைய அரசாங்கத்தை பழிவாங்கும் எண்ணத்தில் அவர் இருந்தமையே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெல்தெனியவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே லக்ஸ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய அரசாங்கத்தை பழிவாங்கும் எண்ணத்திலேயே இருந்தார்.

இதனால்தான், அவருக்கும் பாதுகாப்புச்சபைக்கும் தாக்குதல் குறித்த எச்சரிக்கை முன்கூட்டியே கிடைத்தப்போதும், அவர் அதனை பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் தெரிவிக்கவில்லை.

சிறிசேன இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணித்து இந்தியா சென்றார் இந்த விடயம் குறித்து எவருடனும் எதனையும்பேசவில்லை.

அதனைத் தொடர்ந்தே தாக்குதலை தடுக்க தவறியதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மேலும், இத்தகைய சந்தர்ப்பத்தில்தான் கோட்டாபய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டார். இந்த நடவடிக்கைகள் அப்போதைய முப்படை தளபதியான சிறிசேன மற்றும் பொதுஜனபெரமுன இணைந்து திட்டமிட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டன” என குறிப்பிட்டுள்ளார்.