நயினாதீவு கட்டுப்பாடுகளில் சிங்களவர்களிற்கு ஒரு நீதி? தமிழர்களுக்கு ஒரு நீதியா?

13335666 465856293620067 4524749366483772675 n

நயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் அனுமதி பத்திரம்(பாஸ்) நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா நிலவரம் காரணமாக, ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து நயினாதீவிற்கு செல்ல வேண்டுமென்றால் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும். பொலிஸ் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆலயத்தில் மக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறையினால், நயினாதீவிற்கு பிற அலுவல்களிற்கு செல்பவர்களும், நயினாதீவை சேர்ந்தவர்களும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

பேருந்துகளில் செல்பவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று அனுமதி பத்திரம்(பாஸ்) பெற்றே, மீண்டும் பயணம் தொடர வேண்டியுள்ளது.

இதேவேளை தென்னிலங்கையில் இருந்து பேருந்துகளிலும், வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக வரும் சிங்கள மக்கள் எந்த அனுமதி பத்திரம்(பாஸ்) நடைமுறைகளுமில்லாமல் நயினாதீவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நயினாதீவுக்கு செல்ல அவர்களிற்கு கட்டுப்பாடு இல்லாத நிலையில், அவர்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அனுமதி பத்திரம்(பாஸ்) நடைமுறைக்கு எதிராக புங்குடுதீவு, நயினாதீவை சேர்ந்த இருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.